1.அவதாரம்
1. அவதாரம்
பாற்கடலில் கிடந்தஅரி
அருளிடவே வருமருவி
பாருலகில் உறுபிறவி
வந்ததல்ல உடல்மருவி
நீர்முகந்த ஈசுவரி
வான்எழுந்த சுடரினொளி
பார்த்திருக்கப் பயந்துதறி
சேர்ந்ததுவே ஊடுருவி
பாரதனில் விழுமொளியில்
வளர்ந்திருக்கும் பயிரெனவே
வயிரதனில் உறுகருவில்
வளர்ந்ததுவே உயிருமதில்
பிறந்திருந்த அக்குழவி
அழவுமில்லை அதுவழக்கில்
சிரித்துகன்னம் விழும்குழியில்
மரிக்கும்மனம் அதன்அழகில்
கிடந்தவிசைக் கருவியெலாம்
பிறந்ததுமே எழுந்தனவாம்
இசைபொழிந்து மகிழ்ந்தனவாம்
புவியின்மிசை அதிசயமாம்
கண்டதான அதிசயத்தை
விண்டதாகச் சொல்லுமுன்னே
கிடந்தவனின்படுக்கையின்கீழ்
நெளிந்ததுவே சர்ப்பமொன்று
கிடந்தவனும் விட்டுணுவே
நெளிந்ததுவும் சேஷன்தானே
அறிந்திதனை நெஞ்சம்தன்னில்
தெளிந்தவள்பேர் சுப்பம்மாவே
பிறந்தவன்பேர் சத்தியனாம்
தரையில்வந்த நாரணனாம்
உரையிலவன் சிக்கனமாம்
உண்பதுமே தாவரமாம்
Comments
Post a Comment