6.அன்றொரு நாளினிலே ஆற்றின் மணல் தனிலே


பொழுதுசாய்ந்த வேளையிலே பௌர்ணமியின் தினங்களிலே
முழுநிலவின் ஒளியினிலே எழுந்திருக்கும் மகிழ்ச்சியிலே
குழந்தைகளும் ஆட்டத்திலே திளைத்திருக்கும் வேளையிலே
தொழுதுமவன் நண்பரெல்லாம் பாடச்சொல்லிக் கேட்டனரே

மனதுமிறை நாட்டத்திலே உடலின்உரம் ஆட்டத்திலே
நண்பர்களே ஆடிடுவீர் உடலில்உரம் கூட்டிடுவீர்
என்றுமவன் சொன்னதுமே சிறுவர்களும் மறுத்தனரே
சென்றுஆடும் வயதினிலே சான்றோர்போலப் பேசினரே

ஓடியாட நாட்டமில்லை இறைவன்புகழ் நெஞ்சினிலே
சூடிப்பாடும் இன்பம்தன்னை நாடுகின்றோம் நாங்களுமே
பாடுபாடு பஜனைநிதம் நாடுநாடு இறைவன்பதம்
என்றுஅன்று சொன்னவனே இன்றுஉன்னை நாடிவந்தோம்

உன்திறனைக் காட்டிடுவாய் பாட்டெழுதிப் படித்திடுவாய்
இனியஉந்தன் குரலெடுத்து கனிவுகொண்ட நெஞ்சம்தொட்டு
பனியெனவே குளிர்தருமுன் பாடல்தனைப் பாடிடுவாய்
மனத்தினிலே இறையுணர்வு தோன்றும்படி செய்திடுவாய்

சிறுவர்களின் ஆர்வம்கண்டு மனம்மகிழ்ந்த சத்தியமும்
பொறுமையாகப் பாடல்களைப் பாடிடவும் செய்திடுவான்
சிறுவர்களும் பாடிடவே பாடல்பல இயற்றிடுவான்
சிறப்புகொண்ட பிறப்புமானான் சிறந்ததொரு கவியுமானான்

யமுனைக் கரைதனிலே குழலின் இனிமைதனில்
எவரும் மயக்கமுற நெஞ்சில் இனிமைவர
அவரின் மனம்மகிழ கண்ணன் செய்ததுபோல்
அழகின் கவியில்சத்யம் கலியின் கண்ணனானான்

உலவும் இறைவனவன் உலகைப் படைத்தவனாம்
வலமும் வருவதாகச் சிறப்பில் உயர்ந்தவனாம்
நினைவில் அவனைக்கொண்ட நண்பர் சிலருமன்று
அவனை மடியிலிட்டு ஓய்வினை யெடுக்கச்சொல்வர்

அதனில் தோன்றுகின்ற இன்பத்தை யாவருமே
அடைந்திட எண்ணம்கொண்டு ஒருவர்தம் பின்னர்ஒருவர்
அவனை மடியிலிட்டு தாலாட்டுப் பாடிடுவர்
மனதில் நிரம்புகின்ற மகிழ்ச்சியில் திளைத்திடுவர்

சிறுவர்கள் மட்டுமல்ல *ராஜுவின் பெருமைதன்னை
பெரியோர் சிலரும்அறிவர் மனதினில்உவகை கொள்வர்
இறைவனின் அம்சமாக தெரிவதாய்ச் சொல்லுவாரே
அதுவும் ஆவதுமே அவனருள் செய்ததாலே

அப்படி அறிந்தசிலரில் ஒருவராம் சுப்பராயர்
எப்படி யேனுமோர்நாள் அவனருள் கொள்ளஎண்ணி
தினப்படி சிறுவனவன் வருகின்ற வழியில்சென்று துடிப்புடன் அவனைமடியில் அமர்ந்திட வேண்டிநின்றார்
சிறுவனே நானும்என்னை வேண்டுதல் உமக்கழகோ
பெருமையைச் சேர்த்துக்கொள்ள நாடுவீர் நாதன்பாதம்
என்றுமே பகன்றபையன் முகத்தினை சென்றுஅருகில்
கன்றினை அன்பினாலே நோக்கும்தாய்ப் பசுவைப்போலே
பாசத்தில் பார்த்துமவனை பெரியவர் பேசலுற்றார்
பேசிடும் தெய்வம் உன்னை தூசுமாய் நினைக்கலாமோ
பேசுமே உலகமெல்லாம் உன்புகழ் தன்னைநாளை
காசிலா மணியேநீயும் மண்வந்த தெய்வம்தானே

மடியினில் உன்னைக்கொள்ள மடியுமென் பாவமெல்லாம்
விடியலில் தோன்றுகின்ற ஆதியாய் வந்தென்ஆயுள்
முடியுமுன் ஆட்கொண்டேயென் பிறப்பினை அறுக்குமந்த
முடிவிலாச் சிறப்புநீயே வடிவிலா தெய்வம்நீயே

அன்றவர் சொன்னவாக்கு உண்மையாய் ஆனதின்று
காற்றுபோல் அவனின்மேன்மை பரவியும் நிற்கின்றது
பிறந்தஊர் பர்த்திமற்றும் பாரதம் தாண்டிச்சென்றே
விரிந்துமே உலகமெங்கும் அவனின்புகழ் நிற்குதிங்கு






Comments

Popular Posts