8.பள்ளிசென்ற பிள்ளை செய்துநின்ற லீலை


சிறுவன்சத்யா பள்ளிதன்னில் ஆசிரியர் பலருமே
அவன்வருவான் என்றுஎதிர் நோக்கிவகுப்பு சென்றனர்
அன்பினாலே அவன்அணுக்கம் கொள்ளஆவல் கொண்டனர்
கோபியரின் கோகுலத்துக் கண்ணனுமாய்க் கண்டனர்

மனிதபந்த மில்லைஇது ஆன்மம்கொண்ட பந்தமாம்
இனித்துமனம் மகிழ்ந்திடவே இன்பம்தரும் சொந்தமாம்
இனியும்வேறு தேவையில்லை என்றுமனம் தவிக்குமாம் 
சூரியன்முன் பனியாய்த் தாபம் அவனைக்காண விலகுமாம்

தேர்வுதன்னை நடத்துவது பள்ளியிலே வரையறை
சோர்விலாமல் மணித்துளியை பூர்த்திசெய்வதே முறை
ஆர்வமாக முடித்துவிட்டான் தேர்வைஅரை மணியிலே
மற்றவர்கள் முடிக்கவியல வில்லைஇரு மணியிலே 

முழுதையுமா எழுதிவிட்டாய் பாதியிலேன் எழுந்துவிட்டாய்
பழுதைச்சரி பார்த்துநன்றாய் எழுதும்தன்மை மறந்துவிட்டாய்
விழுப்பமுடை நல்சிறுவன் எழுந்தவுடன் வியப்புமுற்ற 
தொழுதுமவன் வணங்குமாசான் கேள்விதன்னை எழுப்பிவிட்டார் 

அரைகுறையாய் எழுதவில்லை தெரியவில்லை என்பதில்லை 
விரைவுடனே எழுதிவிட்டேன் நிறைவுடனே முடித்துவிட்டேன் 
சரியெனவே புரிந்திடநீர் திருத்திடவே அறிந்திடுவீர்
சிறுவனிதைச் சொல்லினனே சிரித்துவிடை பெற்றனனே 

விரைந்துமதை ஆர்வமுடன் ஆசிரியர் திருத்தினரே 
சிறந்தமைந்த பதில்களையே கண்டுமனம் வியந்தனரே
பிறந்தமைந்தன் சிறுவனில்லை மண்ணில்தோன்றும் ஒருவனில்லை
சிறந்தவொரு தனிப்பிறவி என்றவரும் உணர்ந்தனரே 
பள்ளிதனில் ஒருமுறை வீட்டுப்பாடம் எழுதிட 
வில்லைஎன்ற காரணம் தன்னைச்சொல்லி ஆசானும்
மேசைமீது ஏறவைத்து நீண்டநேரம் தண்டித்தார்
ஓசையின்றி பணிந்தசத்யம் அமைதியாகக் கூறினான்


அறிவேன்நன்றாய்ப் பாடமும் அளிப்பேன்பதிலைக் கேள்விக்கும்
தெரியும்என்ற காரணம் கொண்டுநானும் எழுதலை
மரியாதையைக் குறைக்கலை மனதில்கர்வம் கொள்ளலை
மன்னித்தெனை அனுப்புவீர் கண்ணியமாய் நீங்களே..!


சிறுமதியின் ஆசானுக்கு *பிறைமதியன் தெரியலை
அறிந்திடவும் சிறுவனுக்கு தேவைஎதுவும் இருக்கலை
பெருத்தவறி யாமையினால் கருணைநெஞ்சில் மறந்திட்டான்
கொழுத்தசிறு மதியதனால் மன்னிப்பினை மறுத்திட்டான்


*பிறைமதியன் = சிவசக்தி சொரூபனான சத்ய சாய்
சிறுவன்சிரித்து நின்றனன் பிறவிப்பயனை அளித்திடவே


நின்றிடவே சிறுவனுக்கு தண்டனையும் தந்தனன் அற்புதமும்நிகழ்த்திடவே மனதில்எண்ணம் கொண்டனன்
தின்றிடுமே வெட்கம்என்று நெஞ்சினிலே களித்தனன்
வகுப்புநிறைந்து முடிந்தது கலையும்நேரம் வந்தது
அடுத்தவகுப்பு சென்றிடவே ஆசிரியர் எழுந்தனன்
ஆசிரியர் அமர்ந்திருந்த இருக்கை உடன்வந்தது
பிரிந்திடவே மனமிலாமல் ஒட்டியுமே இருந்தது

சிரித்திடவே முடிந்திடாமல் சிறுவர்களும் தவித்தனர்
மறந்துதன்னை மன்னித்திட ஆசிரியர் வேண்டினார்
கரைந்துமனம் அருளிடவே இருக்கைபிரிந்து போனது
மறைந்துமாசு நீங்கிஆசான் உள்ளம் தூய்மை ஆனது

புக்கப்பட்ணம் பள்ளிசிறிது படிக்கஉள்ள வகுப்புமைந்து
படிக்கமேலும் விழைந்துடுவோர் செல்லவேண்டும் கமலபுரம் 
துடிக்கும்சிறுவன் படித்திடவே சென்றனனே கமலபுரம்
தடித்துபாதம் வெடித்திடவே நீண்டதூரம் நடந்தனனே 

இருந்தவூரில் நீருமில்லை வறட்சியாலே மிகுந்ததொல்லை
பறந்துதினமும் சிறுவன்காலை மொள்ளவேண்டும் நடந்துநீரை
பிறகுகிடைக்கும் நேரம்நூலைப் படிக்கப்போது மானதில்லை
எனினும்சிறுவன் மக்குமில்லை இவனுக்குமோர் இணையுமில்லை 
சிலசமயம் நண்பருடன் சேர்ந்துசென்று புகைவிடும்
வண்டிவரும் நிலையத்திலே அமர்ந்துகொண்டு சத்தியம்
கொண்டுவரும் உணவுடனே நண்பர்மனம் மகிழ்வதாய்
கண்டிடாத நல்விஷயம் பகிர்ந்திடுதல் வழக்கமாம்
 
ஒருசமயம் வண்டியிலே அமர்ந்தவெள்ளைக் காரனும்
விரைந்துமவனை நோக்கியுமே இறங்கிநடந்து வந்தனன்
பறந்துவரும் விதத்திலான அவசரத்தைக் காட்டினன்
துரத்திவரும் கதியிலான பரபரப்பில் நெருங்கினன்
வெள்ளையர்கள் ஆண்டிருந்த அந்தகாலம் தன்னிலே 
சிறுவர்களை பிடித்திழுத்து படையில்சேர்த்த பயத்திலே
நண்பர்களும் மிரண்டனர் கவலைமிகவும் கொண்டனர் 
கண்படவே ஓடிவந்த *வெள்ளையன்மேல் சினந்தனர் 
*Wolf Messing

அமர்ந்திருந்த நண்பர்களில் ஒருவனான நண்பனும் 
பறந்துமோடி வீடுசென்று இந்தசேதி சொல்லினன்
பிறந்தகவலை மனமரிக்க தந்தையுடன் வந்தனன் 
விரைந்துசத்யம் தன்னையும்தன் வீட்டிற்கழைத்து சென்றனன்

பின்தொடர்ந்த வெள்ளையனும் நீண்டநேரம் நின்றனன்
நொந்துமனம் அழுதுமவன் பிறகு சென்று மறைந்தனன் 
செல்லுமுன்னே கதவினிலே வரிகள்சிலது எழுதினன்
சொல்லவந்த சேதிஎழுத்தில் எழுதியவன் பழுதிலன் 

உள்ளுவது யாருமில்லை இறைவனுமே தானது
தெள்ளத்தெளிய நெஞ்சினிலே எனக்குத் தெரியலாகுது 
உங்களுடன் உறைந்துமவன் இருந்திருப்ப தாவது 
நெஞ்சினிலே நீங்கள் கொண்ட அன்பினாலே தானது 

பஞ்சில்தீயு மாகநெஞ்சம் கனல்பிடித்து எரியுது 
கெஞ்சியவன் பாதம்பணிய முடிந்திடாமல் இருப்பது 
செஞ்சவெந்தன் பாவமன்றி வேறெதனால் வந்தது
மிஞ்சுமெந்தன் வினைகளைந்து கண்டிடுவேன் மீண்டும்வந்து

துஞ்சியமெய்க் கட்வுள்பாதம் கழுவிடுவேன் நீர்சொரிந்து 
என்றுமெழுதிச் சென்றுமவன் திரும்பிவந்து பார்த்தது 
சென்றுமறைந்து ஆண்டுபல கடந்தபின்னே தானது
நின்றுமாசி ரமத்திலிறைவன் உய்யும்போது தானது 

போர்க்களத்தின் நடுவிலே வேண்டிநின்ற தனஞ்செயன்
பார்த்திடவே விஸ்வரூபக் காட்சிதந்த கிருட்டிணன் 
போலஅன்று ஆன்மம்ஒளிர வேண்டிநின்ற வெள்ளையன்
சாலக்காணும் வண்ணம்தன்னில் காட்சிதந்தான் சத்தியன் 

உரவக்கொண்டா பள்ளியில் இருக்கைக்குத்திண் டாட்டமாம் 
சிறுவர்களும் அமர்ந்திட வகுப்பிலாத கஷ்டமாம்
நிதிதிரட்டி கட்டிடம் கட்டவேண்டும் என்றுமே 
எண்ணம்அன்று வந்ததாம் திட்டம்ஒன்று பிறந்ததாம்


*விரைமுனித் திகழ்மணி எனும்நடம் புரிந்திடும்
சிறந்தநர்த் தகிதனின் கலைநிகழ் வினுக்குமே
விரைந்துமேற் பாடுமே நடந்துமே முடிந்ததே
நிறைந்துபை வழியப்பணம் கையில் சேர்ந்ததே
சிறந்தவந்த நர்த்தகி நடத்தும்விளக்கு நாட்டியம்
மனம்கவர்ந் திழுத்திடும் விதத்திலான தூண்டிலாம்
என்னும்கா ரணத்தினால் மக்களார்வம் காட்டினர்
உதவிடவே மனமுவந்து நிதியைவாரி வழங்கினர்
நடனம்காண ஆவலாய் நாளைஎதிர் நோக்கினர்
பள்ளியிலே யாவரும் மகிழ்ச்சியிலே மிதந்தனர்
உயர்ந்தபதவி உள்ளமா வட்டத்துடைய ஆட்சியர்
தன்னைஅழைத்து மிருந்தனர் தடபுடலாய் செய்தனர்
*விரைமுனித் திகழ்மணி = ருஷ்யந்திர மணி

குறித்த நாளில் பள்ளியும் விழாக்கோலம் பூண்டது
நிறைந்தகூட்டம் தனக்குமேற் பாடுகளும் நடந்தது
விரைந்துமன்று காலையில் செய்திஒன்று வந்தது
சிறந்தகலை நர்த்தகி சுகமுமில்லை என்பது

பள்ளியிலே யாவரும் கவலைமிகவும் கொண்டனர்
மனம்நிறைந்த பயத்திலே வேர்வையிலே குளித்தனர்
என்னவென்று செய்வது எப்படிநாம் சொல்வது
என்றுமனம் கலங்கியே யாவருமே நின்றனர்

சிறுவன்ராஜு தலைமையா சிரியரிடம் சென்றனன்
வருந்திடவே காரணம் எதுவுமில்லை என்றனன்
அரங்கம்நிறை மக்களும் மனம்மகிழ நாட்டியம்
சிறந்திடவே நானுமே புரிந்திடுவேன் என்றனன்

பெண்மணியாய் நானுமே புனைந்திடவே வேடமே
என்னிடமே யார்க்குமே தோன்றிடாது ஐயமே
நானேஅந்த நர்த்தகி நாட்டியத்தி லேபுவி
ஆடிடவே செய்வது என்பொறுப்பு மாகுமே

தலையில்தீபம் தன்னையே கொண்டுநீயா ஆடுவாய் ?
*மண்படுத்தத் துணியினை கலைநிகழ்ச்சி முடிவிலே
எடுத்துநீயா ஆட்டுவாய் ? எப்படி நீ காட்டுவாய்?
பள்ளியிலே யாவரும் ஐயம்கொண்டு கேட்டனர்
*குனிந்து வாயால் கைக்குட்டையை கவ்விக் காட்டுவது அந்த நர்த்தகியின் தனிச் சிறப்பு


தலையில்தீபம் கொண்டுமே கைப்படாமல் தாங்குவேன்
நிலையில் மாற்றம்இன்றியே குனிந்துதரையைக் கூட்டுவேன்
கடைசியிலே சிறப்பதாய் கண்ணின்இமை தன்னிலே
பிடித்துமூசி தூக்குவேன் தூசிஎனக் காட்டுவேன்

விரைந்துநீங்கள் செல்லுங்கள் ஆவனவும் செய்யுங்கள் 
பகன்றுநின்ற ராஜுவை வியந்துமக்கள் நோக்கினர்
வழியுமின்றி நகர்ந்தனர் இறைவனையே நம்பினர்
எழிலின்சிறுவன் மனதிலே புன்னகைத்து நின்றனன் 

ராஜுவிரைந்து மறைந்தனன் ஒப்பனையில் தோன்றினன்
திரையும்விரைவில் மறைந்தது சிறியுருவம் தெரிந்தது
தெரியும்விதத்தில் விளக்குமேற்றி தட்டில்அடுக்கி வைத்தனர் 
விரைந்துமதனை நர்த்தகியின் தலையில்எடுத்து வைத்தனர் 

நடனம்தொடங்க லானது உடலும்சுழல்வ தானது
நழுவிடவே செய்திடாமல் விளக்குவிளக்க மானது
பொழுதுமங்கு போவதுமே தெரிந்திடாமல் இருந்தது
எழுத்திலடக்க முடிந்திடாத எழிலிலது இருந்தது

கடைசியிலே கீழ்தெரிந்த ஊசிதன்னை இமையிலே 
எடுத்ததிலே மகிழ்வுகொண்டு அதிர்வுகண்ட தரங்கமே
இவளுக்கிணை புவிதனிலே காண்பதுவே அறிதுமே 
என்றுசொல்லிப் புகழ்ந்தனர் மக்கள்களிப்பு கொண்டனர்
சிறப்புப்பரிசு ஒன்றினையும் சிறுவனுக்குத் தந்தனர்

சிதம்பரத்தி லாடிய சதாசிவன் நடம்தனை
பதஞ்சலி ஒருத்தரே கண்டதன்று நடந்ததாம் 
பதம்பிடித்து ஆடியே மகிழ்ந்துயாரும் கண்டிடும்
விதம்களித்து ஆடினான் கலியுகத்துச் சிவனுமாம்..!

Comments