5.கலியின் ராமன் தரிசனம் காண வந்தான் அனுமனும்

5. கலியின் ராமன் தரிசனம் காண வந்தான் அனுமனும்


பஜனைமட்டி லன்றிஇறையின் உணர்வில்சிறுவர் ஆழ்ந்திடும் 
விதத்திலவரைத் திரட்டிமார் கழியின்காலைப் பொழுதிலே 
குளித்துக்கோவில் சென்றிட விளித்துமிறையை வேண்டிட 
பணித்தவரை நல்வழிப் படுத்திநின்ற பண்பவன்

குளித்துமுடித்த சிறுவரும் சேர்ந்துசெல்லக் கூடினர் 
விளித்துதுதி செய்திடவே அனுமன்கோவில் சென்றனர் 
களித்துப்படித்தப் பாட்டுடனே அவனைவலம் வந்தனர் 
துளிர்த்தபக்தி நெஞ்சுடனே சிலிர்த்துப்பாடிப் போற்றினர் 

வந்தசிறுவர் யாவரையும் வலம்வருதல் செய்துதான்
தனித்திருந்து அமைதியாய் அமர்ந்திருக்கும் சத்தியம் 
இனித்தவிந்த மகிழ்ச்சியினை நமக்களித்து ஓரமாய் 
தனித்திருக்க லாகுமோ அழைத்திடுவோம் நம்முடன் 

பணித்திடுவோம் வலமும்வர எனத்துணிந்த சிறுவரின் 
மனம்கனிந்த அன்பிலே உளம்நனைந்து சத்தியம் 
வலம்வருமப் பாதையில் தடைப்படுத்த லாகவே
முளைத்துநின்ற மந்தியொன்று பணிந்து சொல்லலானது

விண்கடந்த வாமன தரையில்வந்த மன்னனே 
பண்கடந்த சௌமிய விரைவிலருளும் ராமனே 
மண்நடந்த பாதனே சிறையில்பிறந்த கண்ணனே
புண்ணடைந்த நெஞ்சிலே பண்ணிசைக்கும் வண்ணனே 

கலியில்வந்த ராமன்நீ வழியைக்காட்டும் ஒளியும்நீ
துளியும்கண்ணின் பார்வையின் கருணைகாட்டல் விட்டுநீ 
வலியவந்து என்னையே வலம்வருதல் செய்துநீ 
கொடியபாவம் என்னையே சேரச்செய்வதேனோ நீ 

இதனைக்கண்ட சிறுவரும் அவனின்பெருமை உணர்ந்தனர் 
எதனாலவனும் வலம்வரவே மறுத்ததென்றும் அறிந்தனர்
மனதிலுமே இனமறியா மகிழ்ச்சி மிகவும் கொண்டனர்
கணத்தினிலும் அவனைஇனி பிரியாநட்பு பூண்டனர் 


முன்பக்கம்       அடுத்தபக்கம் 

Comments