7.சத்தியத்தின் அன்புத்தந்தை மல்லிகையால் செய்த விந்தை



சத்தியத்தின் தந்தைசுப்ப ராயரையே வெறுப்பவர்
அதனால்ராஜு அவரிடத்தில் பேசியதைத் தடுத்தவர்
எதனாலவனை நாடினாய் என்னதுநீ பேசினாய் ?
என்றுமவனை தந்தையார் கோபத்திலே வினவினார்

சுப்பராயர் நல்லவரென் இறையின்தன்மை அறிந்தவர்
இப்படிஏன் அவரைநீர் வெறுத்துப்பகை கொள்கிறீர்?
இப்படியாய்ச் சிறுவனும் பெரியவன்போல் பேசினான்
இலைமறைவாய் தானுமிறை வடிவமென்றும் கூறினான்

தெய்வத்தன்மை என்னது உன்னிடத்தில் உறையுது
மையில்செய்யும் மாயமாநீ ஏதாவது செய்வது ?
உண்மையில்நீ யாரெனநான் அறிந்திடவே சொல்லிடு
இல்லையெனில் தெய்வத்தன்மை உன்னிலில்லை அறிந்திடு


கோபம்கொண்ட வெங்கமரும் அவனைநோக்கிக் கேட்டதும்
பாவமேநீர் இனியுமறி யாமையிலே உய்வது
தாவும்மனதில் அமைதியினை மட்டுமேநான் தருவது
கூவும்வண்ணம் வந்ததுன்பம் என்பெயரால் போகுது

யாரும்முயல என்னைஅறிய இயலாமல்தான் போகுது
பாருமிதை யாரெனநான் அறிவதாகப் பேரினை
 தரையினிலே காட்டிடுவேன் என்றுமலர் மல்லிகை
கரத்தினிலே எடுத்துத்தரையில் வீசிஎறிந்து சிரித்தனன்

வீசியபூ சிதறவில்லை சிறுவன்மனது பதறவில்லை
கூசியேகண் மூடும்வண்ணம் கொண்டஒளிச் சிதறல்கொண்டு
முத்துக்களாய் சேர்ந்தபூக்கள் எழுதிநின்ற பேரடா
முத்திதரும் சத்யசாயி பாபாஎன்று தானடா

மாயமில்லை மந்திரமும் இல்லைமனதில் அன்படா
தூயவனாய் வந்தகண்ணன் கலியில்கொண்ட பேரடா
நித்தியத்தில் கொண்டு சேர்க்கும் எண்ணும்நெஞ்சைத் தானடா
சத்தியத்தின் அன்புத்தந்தை என்னும் பொருளிலேயடா


கூறிடவே நாவினிக்கும் நீயும்சொல்லிப் பாரடா
ஊறிடுமே நெஞ்சினிலே அன்புத்தேனின் ஊற்றடா

பாரினிலே பின்னொருநாள் புகழ்பரப்பு மேயடா
சேருகின்ற அடியவரை அணைத்திருக்கும் தாயடா


விண்டுசொல்ல முனிவருக்கும் இயன்றிடாத ஓர்பொருள்
பண்டுமுதல் இருந்திருக்கும் ஆதியான பரம்பொருள்
மண்டும்மன இருளைப்போக்கு கின்றதான திருவருள்
கண்டறிந்து உய்யுகின்ற திறமிலாத வெங்கமர்

அச்சமாக வாயடைத்து ஊமையான ஓர்சுவர்
துச்சமாக அதுவரையில் நினைத்ததந்தை யாம்அவர்
அன்றுமுதல் மகனிடத்தில் பக்திகொண்டு பழகினார்
கன்றுபோன்ற சிறுவனிடம் சக்திகண்டு மயங்கினார்

Comments