13.ஈரநெஞ்சின் சேவை ஈசன்துஞ்சும் பூஜை


வாரம்தோறும் யாகம்போன்ற மிகஉயர்ந்த பூஜையும்
சேரும்நல்ல மணம்மிகுந்த தீபதூப மலர்களும்
கோரும்வரம் பெறுவதற்கு அவியில்சொரியும் அர்ப்பணம்
யாவுமாகும் சிறியதாக ஈரம்கொண்ட சேவைமுன்

என்றஉப தேசம்தன்னை செய்வதுடன் அமைந்திடா
திருந்துநீ செயல்புரிந்து சேவைபல செய்தது
உலகறியும் உலகுறையும் உலகழியும் வரையிலும்
உணர்த்திவரும் மானிடர்க்கு சேவைபூஜை என்பதை

கிராமசேவை யாகபூஜை பிரேமசேவை ராமபூஜை
உளம்கனிந்த உலகசேவை மனம்இனிக்கும் யோகநிட்டை
மனம்இருக்கும் மாயச்சேட்டை கலங்கிநிற்கும் சேறின்குட்டை
கணத்தழிக்கும் தூயசேவை காட்டிநிற்கும் ராஜபாட்டை


களம்புகுந்து நீயுமே கீதைதன்னில் சொன்னது
புலம்பிறந்து கலியில்நீ அன்பினாலே செய்தது
உளம்நிறைந்து தங்குது பலம்கொடுத்துக் காக்குது

மனம்பிறந்து அன்பது வளம்கொடுத்து ஓங்குது

குளம்நிறைந்த தாமரை மலரவந்த ஆதவா
உளம்நிறைந்து மேநிறை வளரவந்த தூதுவா
சிதம்பிறந்த ஜோதியே நடம்தனில் சதாசிவா
மதம்கடந்த மானிடப் பிறப்பெடுத்த மாதவா
 

வரம்கொடுத்து யாண்டுமே சிறப்பளிக்க வேண்டுமே
கரம்கொடுத்துக் காத்திட பிரேமசாயி வடிவிலே
பிறப்பெடுத்து மீண்டும்நீ அவதரித்தது உலகிலே
அலைந்திருக்கும் நெஞ்சினை நிலைப்படுத்து  தெய்வமே
_______________________________________________



நாராயண சேவை



வயிற்றில்பசி வந்திட பத்தும்பறக்கும் பட்டென
கயிற்றில்இறுகும் கழுத்தென மயக்கம்வரும் சட்டென
துயரில்நெஞ்சம் வாடிட கண்மயங்கும் பஞ்சென
வயிறும்தோன்றும் குகையென உலரும்நாவும் வறண்டிட

துயரம்இல்லை யேஇனி எனகனிந்து மேபசி
போக்குமன்ன பூரணி எண்ணம்தன்னி லேயும்நீ
யார்க்கும்நல்ல தேவிநீ மனம்திறக்கும் சாவிநீ
காக்கும்நல்ல தெய்வம்நீ சேர்த்தணைக்கு மன்னைநீ


_______________________________________________


குடிநீர் சேவை

குடிக்க நீருமின்றியே தவித்தமக்கள் கோடியாம்
எடுத்தஒரே முடிவினால் மனதின்அன்பு ஊற்றினால்
கிடைத்தநீரின் பலனையே அடைந்தஊரும் ஆயிரம்
நடந்ததாக யாருமே அறிந்திடாத தாயிரும்
துயரம்கொண்ட அழுகைநீர் துடைத்ததங்கு நீருமே

வியக்குமா றிருப்பதைச் சென்றுநீரும் பாருமே
அரவமின்றி ஆற்றிய பெருமைகூற முயன்றிட
*ஆயிரம்நா அரவமும் இயன்றிடாமல் தவிக்குமே
*ஆயிரம்நா அரவமும் = ஆதிசேஷன்

Please visit : http://www.sathyasai.org/saiwater/content.htm

_______________________________________________


கல்விச் சேவை

அறிவுப்பசியைத் தூண்டிட அதனைசென்று போக்கிட
சிறக்கவேண்டும் பள்ளிகள் சென்றுபயிலப் பிள்ளைகள்
குறைபடாத வண்ணமாய் அறிவைப்பெருக்கத் திண்ணமாய்
கருணதன்னின் எண்ணமாய் நாட்டின்அறிவுச் சின்னமாய்
திறந்துவைத்த பள்ளியும் பல்கலையின் கழகமும்
வளர்ந்துமின்று நிற்குது அறிவளித்துச் சிறக்குது
ஏட்டுச்சுரை கல்வியன்று இலவசமாய்க் கிடைப்பது
கேட்டுமெங்கும் கிடைத்திடாத மதிப்புசார்ந்த அறிவது
மருத்துவச் சேவை

உடலில்நோயும் வந்திட உலகம்இல்லை வாழ்ந்திட
கடலில்உள்ள நீரென நிதியிருந்தும் மருத்துவ
செலவுசெய்து நீக்கிட நேர்வதாகும் உயிர்விட
உலவுகின்ற தெய்வமாம் கருணைகொண்ட அன்னையாம்
களைந்தெடுக்க நோயினை சுருட்டிவைக்கப் பாயினை
முளைத்தெழுந்த மருந்தகம் அளித்துநின்ற சாய்தனை
நினைத்துநெஞ்சில் தொழுதிடல் மட்டுமன்றி சேவையை
விதைத்திருக்க லாகுவோம் பதைத்தநெஞ்சைத் தேற்றுவோம்


_______________________________________________



கலாசார சேவை

அன்னம்தந்து உடலைக் காத்து
நீரைத்தந்து தாகம் தீர்த்து
உடலில்வரும் நோயில் காத்து
அறிவுதரும் கல்வி ஈந்து

போற்றிக்காத்தல் யாவுமே
தீபஜோதி ஆன்மமே
மாசுநீங்கி ஒளிர்ந்திட
பண்பு நிலை நாட்டிட

ஜோதி யாய்நீ தந்தது
சைத னியம் ஆகுது
நாதியற்ற ஜீவனுக்கு
பாதைதன்னைக் காட்டுது


______________




ஏழைதுயரம் போக்கும் சாயி
கிராமசேவை தன்னில் சாயி
தீனஜன தரணத் திட்டம்
தன்னில்வீடு தந்த சாயி

முதியோரில்ல மளித்த சாயி
கதியிலாரைக் காத்த சாயி
செயலில் ஏற்றம் தந்த சாயி
மெள்ளஏற ஏணி சாயி
இயற்கைசீற்றம் தணித்த சாயி
வெள்ளநீரில் தோணி சாயி
*வெள்ளபெருக்கில் அழிந்த நகரம்
தன்னில்வீடு தந்த சாயி

உலகமெங்கும் பரவி நிற்கும்
நிறுவங்கள் மூலம் மனதில்
அன்புஜோதி ஏற்றும் சாயி
மதவிணக்கம் தந்த சாயி

உலகின் அன்னை அன்புசாயி
உலவிச் சென்ற இறைவன் சாயி
கரைந்து மனம் கசிந்த ழைக்க
விரைந்து வரும் தந்தை சாயி

சேவைசெய்த உயர்வு சாயி
சேவைதன்னின் உயர்வும் சாயி
சேவைமூலம் மனதில் ஞானம்
விரைவில்தந்த தெய்வம் சாயி

பிறக்கவைக்கும் சக்தி சாயி
பிறப்பறுக்கும் முக்தி சாயி
 சிறப்பிலெமை வைக்கும் சாயி
கறைபடாத மேன்மை சாயி

வரவிருக்கும் காலம் தன்னில்
பிறக்கவேண்டும் ப்ரேம சாயி
சிறக்கவெங்கள் இதயம் தன்னில்
இருக்கவேண்டும் என்றும் சாயி..!

*வெள்ளபெருக்கில் அழிந்த நகரம் = ஒரிஸ்ஸா வெள்ள நிவாரணம்

________________________


உலகமெங்கும் சாயி மையம்
கணக்கில் லாமல் இருக்குது
மனதினிலே சுயமில்லாமல்
சேவை செய்து சிறக்குது

சாயி மையம் உள்ளநாடு
நூற்றி னோடு முப்பது
எண்ணி லிரண்டு ஆயிரத்து
ஐநூ றுமாய் இருக்குது

உயிர்கள் துன்பம் துடைத்திடவே
அயர் வுராது உழைக்குது
பெயர் சொலவே உலகில்தேட
கிடைத் திடாமல் இருக்குது


__________________



Comments