4.நகர கீதம் விரட்டும் நோயும்
4. நகர கீதம் விரட்டும் நோயும்
உயர்ந்தகுணச் சிறுவனாக இறைவனுறை ஊரிலே
உயிர்எடுக்கும் நோயுமான வயிற்றுப் போக்கு வந்தது
எவருடனும் சென்றிடவும் பயந்துமக்கள் யாவரும்
சுவர்கள்நாலுக் குள்ளடைந்து சிறைப்படவே வாழ்ந்தனர்
பெரியவர்கள் வெளியில்தலை காட்டிடவே தயங்கினர்
சிறுவர்களை சிறைப்படவே வீட்டுக்குள்ளே அடைத்தனர்
உயிரின்பயம் உயிரெடுக்க தினமும் செத்துப்பிழைத்தனர்
உயிர்கொடுக்கும் தொழிலுக்குமே செல்லாமலே இருந்தனர்
இறையின்உணர் வினையேமக்கள் மனதில்விதைக்க எண்ணிய
இறையின்விளை யாடல்இதுவு மென்றுஎவரும் அறிந்திலர்
சிறுவன்சத்யம் துன்பம்போக்க மனதில்எண்ணம் கொண்டனன்
சிறுவர்அனை வரையும்திரண்டு வந்திடவே செய்தனன்
இறைவன்நாமம் என்னும்கவசம் எந்தநோயும் எதிர்க்குமே
உரத்தகுரலில் பாடிடுவோம் திரண்டுநாமும் தினமுமே
புறப்படுவீர் பஜனைசெய்ய இறைவன்நினைப்பைக் கொண்டுமே
விரட்டிடுவீர் யமனைக்காட்டும் நோயைப் புரட்டி அடித்துமே
உணர்ச்சிகொண்டு சிறுவன்சொன்ன சத்தியத்தின் வாக்கிலே
மகிழ்ச்சிகொண்டு ஆர்வம்காட்டி எழுச்சிகொண்டார் சிறுவரே
நெகிழ்ச்சிகொண்ட நெஞ்சம்கொண்டு தொழுதகைகள் தன்னிலே
எழுந்துநிற்கும் ஒலியெழுப்பும் மணியின்நாதம் கொண்டனர்
புகழ்ந்துபாடி இறைவனையே துணைக்கழைத்த மழலையர்
விழுப்பம்கண்டு பெரியவரும் ஒழுக்கம்கொண்டு சேர்ந்தனர்
பகலவனைக் கண்டுவிலகும் இருளைப்போல நோயுமே
விலகிடவே கண்டு யாரும் வியப்புகொண்டு தொழுதனர்
இறையின்உணர்வில் அமிழ்ந்துபஜனை புரிந்துமாந்தர் உருகிட
விரைவில்மனதின் நோய்கள்போக்கி நட்புடனே வாழ்ந்திட
புரிந்தசிறுவன் வயதுமல்ல பிறைகள்கண்ட எழுபது
உருண்டுமடியில் பால்குடிக்கும் வயதுமான ஏழது
உலகினிலே நகரகீதம் முதலில்இறைவன் செய்தது
சிலரின்உடல் நோய்கள்தீர்க்க மட்டுமல்ல மாந்தர்கள்
பலனுறவே மனதின்நோயைப் போக்கிடவே என்பது
தெளிவுறவே காலம்சிறிது சென்றபின்தான் புரியுது ..!
Comments
Post a Comment