Thursday, February 16, 2012

10.பேய் விரட்டும் பேய்


சிறுவன்சத்யம் படித்திட உரவக்கொண்டா சென்றனன்
அருமையான சோதரன் வீட்டில் சென்றுதங்கினன்
பெருமைகொண்டு போற்றிடும் லீலைஎன உணர்ந்திட
திறமையிலா மனிதரும் பேய்பிடித்த தென்றனர்

பேய்விரட்டப் பேயுமான அரக்கன்ஒருத்தன் இருந்தனன்
போய்விரைந்து அவனைநாடி உதவச்சொல்லி வேண்டினர்
பிடித்தபேயை மிரட்டுவேன் அடித்துமதனை ஓட்டுவேன்
கடித்துப்பல்லை அரைத்தனன் நடித்துப்பேசிச் சிரித்தனன்

கூடவந்த யாவரும் மகிழ்ச்சியாலே நிறைந்தனர்
தேடிவந்த முயற்சிமுடிவில் பயனளித்த தென்றனர்
ஜாடிக்கேற்ற மூடிபோல மந்திரனைப் புகழ்ந்தனர்
ஓடிஎங்கும் சென்றிடாமல் ராஜுவையே கட்டினர்
*மந்திரன் = மந்திரவாதி

குடித்துமுடித்து சிறந்தவன்போல் நடித்திருக்கும் மந்திரன்பிடித்துச்சிறுவன் கண்களிலே காரச்சாறு பிழிந்தனன்
கடித்துப்பல்லை அரைத்துவிழியை உருட்டிஉருட்டிப் பழித்தனன்
துடித்துச்சிறுவன் அழுதிடுவான் என்றுஅவனும் நினைத்தனன்

பிழிந்தசாரின் எரிச்சலிலே கண்கள்சிவந்து பழுத்தது
எழிலின்வதனம் அழுதல்விட்டு வலிபொறுத்துச் சிரித்தது
 பேய்பிடித்த விளைவினிலே வலியிலாமல் சிரிக்குது
போய்உறங்க இரவினிலே முடிந்திடாது வலியிலே
போய்திரும்பி வாருங்கள் நாளைக்குமே பாருங்கள்
பேயும்பயந்து சென்றிடும் நோயும்குறைந்து மறைந்திடும்
ஓயும்உங்கள் பயங்களும் பாயும்மனதும் அமைந்திடும்
என்றுசொல்லி மழுப்பினன் அவரைத்திருப்பி அனுப்பினன்

வீடுசென்ற சிறுவனும் பசுவின்மடி அமுதினை
எடுத்துகண்ணில் இட்டனன் படுத்துத்தூங்கி விட்டனன்
விடிந்தபொழுது பார்க்கையில் கண்கள்தெளிந்து இருந்தன
கலக்கம்கொண்ட உறவினர் மந்திரனை நாடினர்

*மந்திரனும் கலங்கினான் பொய்களையே சொல்லினான்
தந்திரமாய் ஓட்டணும் மந்திரமே போடணும்
என்திறனைப் பாருங்கள் சிகிச்சைபார்த்து தேறுங்கள்
என்றுசொல்லி புதியதோர் சிகிச்சையினைத் தொடங்கினான்
*மந்திரன் = மந்திரவாதி

பிடித்தபேயை விரட்டத்தலையை கத்திக்கொண்டு கிழித்தனன்
வடிந்தகுருதி சட்டைநனைய சட்டைஎங்கு செய்தனன்?
பிழிந்தகாரச் சாறினையே காயத்திலே ஊற்றினன்
விழுகுமாறு நீரினையே உயர்விலிருந்து ஊற்றினன்

கேட்டிடவே மனம்கரைந்து நெஞ்சமெல்லாம் உருகுது
பார்த்திடுவோர் நெஞ்சமென்ன கல்லாகவோ போனது ?
காட்டினிடை வாழ்ந்திருக்கும் மிருகம்கூட இனத்தினை

வேட்டையாட மறுக்குது கூடிச்சென்று வாழுது

பிறந்தஇறையின் வடிவினுக்கு மனிதன்அன்று அளித்தது
சிலுவையிலோர் இடமுமன்றி வேறெதுவும் என்னது ?
நிலுவையிலே வைத்ததுபோல் மீண்டும்குருதி பெருக்குது
எனினுமிறைவன் மனிதர்களைச் சேய்போலணைத்து அருளுது
சிகிச்சையிலே கைசலித்து ஓய்ந்துநின்ற மந்திரன்
கட்டையொன்று கையெடுத்து வலிக்கஓங்கி அடித்தனன்
துடித்திடாத சிறுவன்முகத்தில் சிரிப்பைக்கண்டு திகைத்தனன்
பிடித்தபேயின் சேட்டைஅதுவும் என்றேதிரித்துச் சொல்லினன்
நிட்டைகொண்ட யோகியைப்போல் சத்யம்அமைதி காத்தனன்
முட்டைகொண்ட கருவின்வெள்ளை சிரிப்பைமுத்தாய் உதிர்த்தனன்
சென்றுநாளை மீண்டும்வருக என்றுசொன்ன மந்திரன்
தின்றுதீர்க்க காசைவாங்கி பைதனிலே முடித்தனன்

இன்றுவரை நடந்தகொடுமை போதுமென்று எண்ணினள்
என்றும்சத்யம் நலன்விரும்பும் சோதரியாம் ஒருத்தியும்
சென்றுசேர வேண்டும்முதலில் என்றுமுடிவு கட்டினள்
கொன்றுதீர்க்கும் முன்னேபோக வண்டிகட்டி சென்றனள்

பேயில்இறையைக் காணும்நெஞ்சம் கொண்டவனாம் சத்தியம்
இறையில்பேயைக் கண்டிருக்கும் நெஞ்சம்கொண்டார் மாந்தரும்
இறைவனுமே தப்பித்திட முடிந்திடாது மானுடம்
புலியுமாகச் செலுத்திடுமா கருணைதன்னை மானிடம் ?

No comments:

Post a Comment